ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு 

0
94
A similar incident happened in Kallakurichi school 17 years ago! Information released by Mutharasan
A similar incident happened in Kallakurichi school 17 years ago! Information released by Mutharasan

ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டு மக்கள் நலனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் இரயில்வே அமைச்சகமும், தெற்கு இரயில்வே நிர்வாகமும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றன. நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம், சில ரயில்களின் எல்லை நீடிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதுமே வாடிக்கையாக இருந்து வருகிறது.

வேளாங்கன்னி, நாகூர், காரைக்கால் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களுக்கு ரயில் சேவை போதுமான அளவு இல்லை. நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த ரயில்வே பணிமனை இன்று செயலிழந்து கிடக்கிறது. இந்தத் துயர நிலைக்கு தீர்வு காண, திருவாரூர், நாகபட்டினம் பகுதி பொதுமக்கள் ஒன்றுபட்டு நாளை (28.11.2022) ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனினும், பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வராத தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும், ஒன்றிய அரசின் இரயில்வே அமைச்சகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அமைதிப் பேச்சுவார்த்தையின்போது மக்கள் பிரதிநிதிகளிடம், அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழிகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அணுகுமுறையை உடனடியாக கைவிடப்பட்டு, பொதுமக்கள் கோரிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றித்தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.” என்று அவர் அதில் கூறியுள்ளார்.