ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு! சென்னையில் 4 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை!

0
86

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார்.

ஆனால் அந்த கார் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த நபர் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதாகவும், அவரை தேசிய புலனாய்வு முகமை கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தும் தமிழக காவல்துறை அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே மாநில காவல் துறையின் அலட்சியமே இந்த கார் வெடிப்புக்கு காரணம் என்று பாஜக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்தது. தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்ததால் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகினர்.

இந்த நிலையில், அந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கிறது.

அந்தப் பட்டியல் தமிழக காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னையில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் தலைமையில் நேற்று 4 பேரின் வீடுகளில் காலை 5 மணி முதல் மாலை வரையில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்ததாவது, சென்னை 7 கிணறு சேவியர் தெருவை சார்ந்த தவ்ஹீத் அகமது, மண்ணடி சைவ முத்தையா தெருவை சார்ந்த ஆரூன் ரஷீத், மன்னடி அங்கப்ப நாயக்கர் தெருவை சேர்ந்த முஹம்மது முஸ்தபா, கொடுங்கையூர் வள்ளுவர் தெருவை சேர்ந்த முஹம்மது தபரிஸ் உள்ளிட்டோர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

இவர்களில் முஹம்மது தப்ரிஸ் தவிர்த்து மற்றவர்கள் ஏற்கனவே தேசிய திறனாய்வு முகமை விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது தப்ரீஸ் மென்பொறியாளர் என்பது தெரிய வந்திருக்கிறது. அவருடைய வீட்டில் 4.90 லட்சம் ரூபாய் சீனா, தாய்லாந்து, மியான்மர், மற்றும் சிங்கப்பூர் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதோடு இவருக்கு தொடர்புள்ள மண்ணடியில் இருக்கின்ற கம்பெனி ஒன்றில் 10.30 லட்சம் ரூபாய் மற்றும் இவருடைய வீட்டில் மடிக்கணினி, கிரெடிட், டெபிட், கார்டுகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளனர்.

மற்றவர்களின் வீடுகளிலும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். ரூபாய் நோட்டுகள், வெளிநாடு கரன்சிகள் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான பதில் வழங்கியிருக்கிறார்கள்.

இவர்களிடம் ஜமேஷா முபின் உள்ளிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இருந்த தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.