பிஜேபியின் புதிய மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு! ஒருவர் கூட எதிர்க்காதது ஏன்?

0
90
Lok Sabha
Lok Sabha

ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசே தயாரிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஓபிசி எனப்படும் பிரிவை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பிசி, எம்பிசி இணைந்தது தான் ஓபிசி. இதில், எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்று மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று ஏற்கனவே சட்டம் இருந்தது. ஆனால், அதனை மாற்றி, மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தான் மாற்றி அமைக்கும் என்று மத்திய அரசு சட்டத்தை  திருத்தி மாற்றியது.

இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மராத்தா சமூக மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதால், அம்மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசின் திருத்தச் சட்டத்தை கூறி உச்சநீதிமன்றம் வழங்க மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ஓபிசி பட்டியலை மாநில அரசுகளே தயாரிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் 127வது திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மக்களவையில் இதற்கான சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது.

எப்போதும், எலியும் பூணையுமாக அடித்துக்கொள்ளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், இந்த விவகாரத்தில் கப்சிப் ஆனது. காரணம் இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த சட்டத்திருத்தம் பயன்படும் என்பதால் தான். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அனைத்து எதிர்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு, இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றார்.

அவர் கூறியது போல, நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், ஓபிசி பிரிவை தயாரிக்கும் உரிமை மீண்டும் மாநிலங்களுக்கு வழங்குவதை வரவேற்பதாக தெரிவித்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த வகையிலான இட ஒதுக்கீடு உள்ளது? யார்யார் போராடுகிறார்கள் என்பதை, அந்தந்த மாநில உறுப்பினர்கள் விவரித்தனர்.

இறுதியில், அரசியலமைப்புச் சட்டத்தில் 127வது சட்டத்திருத்த மசோதா  ஒருமனதாக மக்களவையில் நிறைவேறியது. இதே போன்று, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்ததும், விவாதம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். பின்னர், குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்றதும் நடைமுறைக்கு வரும்.