திமுகவின் கிளை அமைப்பாக மாறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி? தொண்டர்கள் வேதனை!

0
123

சென்ற 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் 3 வருடங்களில் நூற்றாண்டை கொண்டாடவிருக்கிறது. 1951 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்த இந்த கட்சி தற்போது வலுவிழள்ளது.

திமுக அதிமுக என மாறி, மாறி, கூட்டணியமைத்து சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வரும் இந்த கட்சி, கடந்த லோக்சபா தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது.

லோக்சபாவில் அந்தக் கட்சிக்கு இருக்கின்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் திமுகவின் தயவு காரணமாக, வெற்றி பெற்றவர்கள். சென்ற சட்ட சபை தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கீழ்வேளூர், தளி, உள்ளிட்ட 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த கட்சியின் கிளை அமைப்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதாக அந்த கட்சியின் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

திமுக கூட்டணியிலிருக்கின்ற இந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மின்கட்டணம் உயர்வு, பத்திரிக்கையாளர் கைது, போன்ற விவகாரங்களில் திமுக அரசை சற்று காட்டமாகவே விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு வெறும் வாயில் மென்று கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அவல் கொடுப்பதா? என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி விமர்சனம் செய்தது.

இருந்தாலும் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, நெல் கொள்முதல் பிரச்சினை போன்ற எல்லாவற்றிலும் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன் வருவதில்லை என்று அந்த கட்சியின் தொண்டர்களே ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் கூட சரியல்ல, வாபஸ் பெற வேண்டும், என்பது போன்ற நாகரீகமான வார்த்தைகளை தேர்வு செய்து அறிக்கை விடுவதாகவும் முத்தரசன் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அரசியல் சித்தாந்த பணிகளை தீவிரப்படுத்தி போர்க்குண மிக்க இயக்கங்களை நடத்த வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் செயல்பாடுகள் அதற்கு நேர் எதிராக இருக்கிறது என்கிறார்கள் அந்த கட்சியின் தொண்டர்கள்.

அந்தப் பொறுப்பில் தா. பாண்டியன் இருந்த வரையில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் பாண்டியனால் மாவட்ட செயலாளராக்கப்பட்ட முத்தரசன் அவருடைய வழியில் இன்று திமுகவின் தீவிர விசுவாசியாக செயல்பட்டு வருகிறார்.

ஆகவே திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் தங்களுடைய முயற்சிக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது