ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை

0
79

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை

அன்புள்ள பாரத பிரதமருக்கும், எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாய் பதவியேற்றமைக்கு வாழ்த்துக்கள். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்களுக்கு ஓட்டுப் போட்ட ஒரு சாதாரண வாக்காளன். கடந்த ஐந்து வருடங்களில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறையாவது எங்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நம்புகின்றேன் . உங்கள் பதவியேற்பு விழாவே எங்களை கதிகலங்க வைத்திருக்கிறது.

இந்தமுறை நீங்கள் டீமானிட்டைஷேஷன் கொண்டு வந்தால் நாங்கள் கவலை கொள்ள மாட்டோம், எங்களிடம் தான் பணமே இல்லையே ! இந்தமுறை நீங்கள் எங்களுக்காய் தந்த வாக்குறுதிகள் கலர் பேப்பர் சுற்றப்பட்டு கவர்ச்சியாய் காத்திருக்கிறது. நடுத்தட்டு மக்களும் அடித்தட்டு மக்களும் கவலையாய் பாத்திருக்கின்றனர் அந்தப் பரிசை. உள்ளிருப்பது புயலா பூகம்பமா எனத் தெரியவில்லை. வேலைவாய்ப்பும், திறன் வளர்ப்பும் முதலில் காத்திருக்கிறது.

கடந்த இருபது வருடங்களாய் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே போவதாய் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு ? 1990 களில் இருந்து உற்பத்தித்துறை வளர்ச்சிபெறவே இல்லை. பப்புதான் காரணமென்று கைகாட்டாதீர்கள். ஆண்ட அனைவரும் குற்றவாளிகளே. தண்டனை என்னவோ என் போன்ற சாமனியருக்கே. உற்பத்தித்துறைக்கு பதில் சேவைத் துறை வளர்ந்திருக்கிறது. உலகப் பொருட்களை விற்கும் சந்தையாய் பாரதமாதாவை மாற்றிவிட்டீர்கள். மேக் இன் இந்தியா என்று போன தேர்தலுக்குத் தந்த வாக்குறுதியை வசதியாய் மறந்து விட்டு இம்முறையும் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.

நீங்கள் இந்தியப் பிரதமர் என தினமும் 100 முறை சொல்லிக் கொள்ளுங்கள். காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் மீட்டிங் என்று உங்கள் உலகம் விரிந்து விட்டதால் பாவம் எங்களைப் பற்றிய நினைவில்லை. அடிச்சோட்றா சின்ராசு என்று உங்கள் வண்டியைக் கொஞ்சம் உள்நாட்டு கிராமங்கள் பக்கம் திருப்புங்கள். சாமானியனின் அன்றாடத் தேவை அன்றைக்கான உணவும் உறைவிடமும் தானே தவிர யோகா டே இல்லை. வயிற்றுக்கு இரண்டு வேளையாவது சோறிட்ட பின் உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்யலாம். இல்லையேல் எங்களுக்கு சவாசனம் மட்டுமே சாத்தியம்.

வருடத்திற்கு எத்தனை மருத்துவர்கள் பொறியாளர்கள் கல்லூரியிலிருந்து வெளிவருகிறார்கள் தெரியுமா ? அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறதென்று தெரியுமா ? எங்கள் ஆடு மாடுகளை விற்று மனைவியின் கடைசி கிராம் தங்கத்தைக் கூட விற்று ஸ்விக்கியில் வேலை செய்யவா படிக்க வைத்தோம். உங்களின் இந்த ஐந்தாண்டு ஆட்சியில் பதில் சொல்லுங்கள்.

அன்புள்ள எதிர்கட்சியினரே ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தோம் தெரியுமா ? நீங்கள் உத்தமர் என்று அர்த்தமல்ல. உங்கள் கரங்களும் கறை படிந்த வையே. அலைக்கற்றை ஊழல், தேர்தலில் பிடிபட்ட பணம் என்று எதையும் மறக்கவில்லை நாங்கள். இந்த வாய்ப்பு கடைசியாய் திருத்திக் கொள்ள தரப்பட்ட வாய்ப்பு. தமிழில் உறுதி மொழி ஏற்கலாம், ஆனால் தமிழ் வாழ தமிழனும் வாழவேண்டுமல்லவா ? பத்து தலைமுறைக்கும் தேவையான சொத்து சேர்த்து விட்டீர்கள் இன்னும் நிறையவில்லை . காலியாய் இருப்பது எங்கள் வயிறும் தான். நினைவிருக்கட்டும்.

இந்தமுறை பத்து சதவீத வாக்குகள் மற்றுமோர் கட்சிக்கு சென்றுவிட்டதை நினைவில் கொள்ளுங்கள். ஓட்டளித்தவர் அனைவரும் முதல்முறை வாக்களித்தவர் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் . எச்சரிக்கை அவசியம். நீங்கள் எதிர்க்கட்சிதானே ஒழிய எதிரிக் கட்சி அல்ல.

இது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சி. இதை நினைவில் வைத்து நல்லாட்சி தருவீர்கள் என்று காத்திருக்கும் ஓர் சாமானியன்.

author avatar
Parthipan K