முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சித் தலைவர் சத்தியாகிரக போராட்டம்!

0
69

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று தனது வீட்டில் ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கேரளாவில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உள்படுத்திக் கொள்ள வலியுறுத்திஹயும் ரமேஷ் சென்னிதலா இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த மாதம் 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். மேலும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக ஒப்பந்த அடிப்படையில் இருந்தபோதுதான் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினார்.

இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளரும், பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளருமான சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையடுத்து இந்த வழக்கிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார்.

இதற்காக ரமேஷ் சென்னிதலா தனது வீட்டில் இன்று ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

author avatar
Parthipan K