12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில்! புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
85

12ம் வகுப்பு படித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைக்கவிருக்கிறார். இதனையடுத்து மாவட்டந்தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த திங்கள் கிழமை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே ஆரம்பித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் விதத்தில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆரம்பித்து வைக்கிறார்.

மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், தங்களுக்கு உயர்கல்விக்கு இருக்கின்ற வாய்ப்பு தொடர்பாக பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகள், என பிரிவு வாரியாக அரிய வைப்பதற்காகவே இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.

கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம், டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கல்லூரி இயக்குனரகம், உள்ளிட்டவை சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தொடக்க நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் முன்னிலையில் HCL நிறுவனத்திற்கும் தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில், அரசு பள்ளிகளில் படித்த 2,500 மாணவ-மாணவிகளை தகுதியினடிப்படையில் அந்த நிறுவனம் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணையை வழங்கவும், பயிற்சிக்கான செலவை அரசு ஏற்பதுடன் பட்டமேற்படிப்பு பயில வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த விழாவில் சென்னையிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் 5000 பேர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இதனையடுத்து மாவட்ட வாரியாக வரும் 29 மற்றும் 30 அதோடு ஜூலை மாதம் 1 மற்றும் 2 உள்ளிட்ட தேதிகளில் மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாக கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.