புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!!

0
74

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்களின் பொருளாதார நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஏழை மக்கள் பழகும் உணவின்றி பசியால் வாடினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியைப் போக்கியது அம்மா உணவகங்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்களின் மூலம் தமிழக அரசு இலவசமாக உணவு வழங்கியது. இந்த சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சேவையை விரிவுப்படுத்த எண்ணிய சென்னை மாநகராட்சி, தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க திட்டமிட்டது. அதன்படி, நடமாடும் அம்மா உணவகங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை 9 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, பொதுமக்கள் சிலருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உணவு வழங்கினர். வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 பகுதிகளில் அம்மா நடமாடும் உணவகங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், கட்டுமான பணியிடங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் செயல்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்கள் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

author avatar
Parthipan K