கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் 96 படகுகளை மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

0
112
MK Stalin - Latest Political News in Tamil Today
MK Stalin - Latest Political News in Tamil Today

கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் 96 படகுகளை மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள், 96 படகுகளை விரைவில் மீட்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படையினரால் செப்.20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதுதவிர, ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகள் மற்றும் 11 மீனவர்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சமீபத்தில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரம் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்கள் படகுகளையும் விரைவில் விடுவிக்க தூதரகம் வாயிலாக உரிய முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்” என்று  அவர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.

அப்போது பி.தமிழ்செல்வன்(37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன், சி.விஜி(28), ஏ.தினேஷ்(26), கே.ரஞ்சித்(27), எஸ்.பக்கிரிசாமி(45), எஸ்.கமல்(25), எஸ்.புனுது(41), எம்.கார்த்திக்(27) உள்ளிட்ட 8 பேர் கோட்டைப்பட்டினத்திலிருந்து சுமார் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவு சென்று அங்கு மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அங்கிருந்த அந்த 8 மீனவர்களை கைதுசெய்தனர். மேலும் அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து காங்கேசன் துறை கடற்படை தளத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த 2 நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.