விசாரணைக்காக கைதிகளை அழைத்து வரும்போது காவலர்கள் நிச்சயம் இதை பின்பற்ற வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

0
55

முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு கடந்த 7ஆம் தேதியுடன் 1 வருட காலம் நிறைவடைந்திருக்கிறது.

இந்த நிலையில், அவர் கடந்த ஒரு வருட காலமாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றால் அது மிகையாகாது.

பதவியேற்ற கையுடன் ரவுடிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. சென்ற ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஆரம்பமான சட்டப்பேரவை கூட்டத்தில் உள்துறை, சுகாதாரம், மின்சாரம், போன்ற 50-க்கும் மேற்பட்ட மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன என தெரிகிறது.

இந்தநிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவு நாளான நேற்று உள்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உள்த்துறை சரியாக செயல்பட்டால் மற்ற துறைகளும் சரியாக செயல்படும்.

சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும். திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மதக்கலவரமில்லை, சாதிச் சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளுமில்லை, காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை ஏற்படுத்தும் துறையாக மாற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதேபோல காவல் துறையினரின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறையை விமர்சிக்க வேண்டாம்.

காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை இருக்கிறது, தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை என்று ஆணித்தனமாக தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று எந்த விதமான பாகுபாடுமில்லாமல் வேறு எதற்கும் இடம் கொடுக்காமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டும். அரசின் நோக்கம் குற்றத்தை தடுப்பதே ஒரு வருடத்தில் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறோம்.

இது நம்முடைய காவல்துறை என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது, குற்றங்களை தடுக்க முன்னுரிமை என்று அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

அதே நேரம் விசாரணை கைதிகள் உயிரிழப்பு என்பது எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதனை நியாயப்படுத்த முடியாது. விசாரணைக்கு அழைத்து ஒருவரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, துன்புறுத்தக் கூடாது.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விசாரணையில் காட்டக்கூடாது என தெரிவித்திருக்கிறார். மேலும் விசாரணைக்காக ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை காவலர்கள் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியிருக்கிறார்.