சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம்

0
133

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம்

சிவனுக்கு புகழ்பெற்ற கோவில்கள் பல இருந்தாலும் அனைத்திலும் சிவபெருமான் லிங்க வடிவிலேயே காட்சியளிப்பார்.ஆனால் சிவன் நடனமாடிய வகையில் காட்சியளிக்கும் ஒரே கோயில் சிதம்பரம் நடராஜர் கோவில் தான்.இவ்வாறு சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்புகழ்பெற்ற புண்ணிய தலமாக விளங்குகிறது, பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது.

மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் பொருள். அந்த ரகசியத்தின் அடிப்படையில் தான்பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம்.

சிதம்பர ரகசியம் என்பது இத்துடன் முடிந்துவிடவில்லை. பொற்கூரையில் வேயப்பட்ட தங்க ஓடுகளின் எண்ணிக்கை, அவற்றில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளின் எண்ணிக்கை என்று தொடங்கி மனித உடலில் உள்ள அத்தனை உறுப்புகளின் எண்ணிக்கைய சுட்டிக்காட்டும் விதத்தில் அமைந்திருப்பது மற்றொரு ரகசியம்.

இவை அனைத்தையும் தாண்டிய பல ரகசியங்கள் சிதம்பரம் தலத்தில் இருப்பதால், தில்லையம்பத்திற்கு மட்டுமே கோவில் என்ற முழு அங்கீகாரமும் வேதங்களில், ஆகமங்களில் உண்டு. இறைவன் ஈசன் ஆதிமூலவராய் குடி கொண்ட இத்தலத்தில், ஆனந்த தாண்டவமாடும் நடராஜ பெருமானாக மூலவராகவும், உற்சவராகவும் குடிகொண்டது இத்தலத்தின் மற்றொரு சிறப்பு.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த சிதம்பரம் தலத்தில், தற்போது இன்னொரு ரகசியம் புதைந்துள்ளதாக பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 21ஆம் படி என்று சொல்லும் இடத்திற்கு அருகில் கட்டப்படும் அதிநவீன ஆடம்பர சொகுசு கட்டிடம் பற்றிய ரகசியம் சிதம்பரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

இந்த சொகுசு கட்டிடம் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் செய்தியாளர்கள் குழு இந்த விவகாரம் குறித்து உண்மையை அறிய களத்திற்கு சென்றது. செய்தியாளர்களின் ஆய்வு மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அங்கு என்ன நடந்தது என்று விவரமாக் பார்ப்போம்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் 21ம் படிக்கு அருகில் பிரம்மாண்டமான நவநாகரீக கட்டிடம் கட்டப்படுவது உண்மை. இந்த கட்டிடம் கோவிலை நிர்வகிப்பதற்காக கட்டப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 54 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை நிர்வாகம் செய்ய கோவிலின் உட்பிரகாரத்தில் பல்வேறு கட்டளைகள் இருக்கும் நிலையில், இந்த புதிய சொகுசு கட்டிடம் எதற்காக என்று புரியவில்லை.

தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பிரகாரங்களை குறித்த கல்வெட்டுக்கள் அழிக்கப்பட்டு கல்வெட்டுகள் துளையிடப்பட்டு அஸ்திவாரம் போடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை வேத, ஆகம விதிகளுக்கு புறம்பானவை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த கட்டிடம் கட்டுவதற்காக நகராட்சி மற்றும் தொல்லியல் துறை அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. சமீப காலமாக கோவிலை நிர்வகிக்கும் தீட்சதர்கள் குழு, தன்னிச்சயாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக, சிவகாசியை சேர்ந்த செல்வந்தரின் வீட்டு திருமணத்தை ஆயிரங்கால் மண்டபத்தில் பிரம்மாண்ட அலங்காரங்களுடன் நடத்தியதாகவும், அதற்கு பிரதிபலனாக பெருமளவில் பணம் கைமாறியதாகவும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த சொகுசு கட்டிட கட்டுமானத்திற்காக, வடகிழக்கு மூலையில் இருந்த கல்வெட்டு கற்கள் அடித்தளம் அமைக்க புதைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு கோவில் வருமானத்தில் இருந்து விதிமுறைகளுக்கு புறம்பாக செலவிடப்படுகிறதா அல்லது சட்டவிரோதமான முறையில் நன்கொடைகள் பெறப்படுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுத்து கோவிலின் புனிதத்தையும், புராதனத்தையும் காக்கவேண்டும் என்பதே இந்த பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.