சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்! பிச்சாவரம் ஜமீன் சூரப்ப சோழனார் மனு!

0
74

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து 2 நாட்களில் 6,628 பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டி கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த கோவிலின் வரவு, செலவு, சொத்து விபரங்களை கணக்கீடு செய்வதற்காக தமிழக அரசு சார்பாக அமைத்த குழுவினருக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், நடராஜர் கோவில் விவகாரம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்கும் விதத்தில் அறநிலையத்துறை ஆர்டிஓ சுகுமார் தலைமையில் விசாரணை குழுவை அரசு அமைத்தது.

அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் கடந்த 2 நாட்களாக கடலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். முதல் நாளில் 4,101 மனுக்கள் பெறப்பட்டது.

நேற்றைய தினம் 2527பேர் மனு வழங்கினர் நேரடியாகவும், தபால் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், 2 நாட்களில் மொத்தமாக 6,628 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

பெறப்படும் மனுக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து இந்து சமயஅறநிலையத்துறை ஆணையரிடம் இந்த குழு ஒப்படைக்கும் என்றும் கூறப்படுகிறது.

நேற்றைய கருத்து கேட்கும்போது பிச்சாவரம் ஜமீன் வம்சத்தை சார்ந்த ராஜா சூரப்ப சோழனார் நேரில் வந்திருந்து மனு வழங்கினார்.

அதில் சோழமன்னர்களின் கட்டுப்பாட்டிலிருந்த நடராஜர் கோவில் சோழர்-வம்ச வழியான பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

100 வருடங்களுக்கு முன்னர் இந்த கோவிலை தீட்சிதர்கள் அபகரித்துக் கொண்டனர். ஆகவே இந்த கோவிலை அரசு கையகப்படுத்துவதில் ஜமீன் ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.