வரவேற்பு குறைந்ததன் எதிரொலி! எழுவது மினி பேருந்துகள் நிறுத்தம்!

0
118

குறைந்த அளவில் பயணிகள் வரும் காரணத்தால் சென்னையில் இயக்கப்பட்டு வந்த எழுவது மினி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் மினி பேருந்து போக்குவரத்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.. மாநகர பஸ்கள் செல்ல இயலாத இடங்களில் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன.

சென்னையின் பெரிய இடங்களுக்கும் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன, ஆட்டோவை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட காரணத்தால் புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு இந்த பேருந்துகள் உதவியாக இருந்தன. கூலித் தொழிலாளிகள், பெண்கள் போன்றவர்கள் இந்த பேருந்துகளை அதிகமாக பயன்படுத்தி வந்தார்கள். தொடக்கத்தில் இந்த பேருந்துகளுக்கு சிறப்பான வரவேற்பு இருந்த காரணத்தால் 200 பேருந்துகள் வரை தமிழக அரசால் இயக்கப்பட்டன.

இந்நிலையில், தொற்று பாதிப்பிற்கு பிறகு அந்த வகையான மினி பேருந்துகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அதில் யாரும் பயணம் செய்வதும் கிடையாது. கூலி தொழிலாளர்கள் வேலை இன்றி சொந்த கிராமத்திற்கு சென்று விட்டதாலும், அனேக மக்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டதாலும், கூட்டமும் இல்லாமல் போயிற்று.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இந்த மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும் மினி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்சமயம் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் காரணத்தால், பேருந்துகள் மட்டுமே முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது சிறிய பேருந்துகளில் மிகக் குறைந்த அளவில்தான் மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதன்காரணமாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு ரூபாய் 20 செலவாகிறது ஆனாலும் ஒன்பது ரூபாய் மட்டுமே கிடைக்கின்றது என்று தெரிவித்தார்.

அதோடு மினி பேருந்துகள் வரும்வரையில் பொதுமக்கள் காத்திருப்பது கிடையாது. ஆட்டோக்களில் ஏறி சென்று விடுகிறார்கள் இதன் காரணமாக, எல்லா மினி பேருந்துகளும் காலியாகவே இயங்கிவருகின்றன. கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்த வகையான பேருந்துகளை இயக்கிய போதும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லாத காரணத்தால், 70 மினி பேருந்துகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. பள்ளிகள் முழுமையாக செயல்பட்டால் மினி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று தெரிவித்தார்.