கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

0
86

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குபதிவு நாளான இன்று தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க வாக்குசாவடிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து, அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றால் அதை உடனடியாக தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடி படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சில பொறியியல் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மற்றும் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இளநிலை மற்றும் அரியர் மாணவர்களுக்கு பிப்ரவரி 21-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல், பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு, பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் மார்ச் 9ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மார்ச் 10ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

author avatar
Parthipan K