புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

0
90

புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது இன்றிரவு புயலாக வலுப்பெற்று அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புயலின் காரணமாக இன்று அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

நாளை மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K