தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் மழைக்கான வாய்ப்பு!

0
107

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் மழைக்கான வாய்ப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, “தேனி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.” இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைகாலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும், இந்த இரண்டு நாட்களும் தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை மறுநாள் தேனி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகிற வியாழக்கிழமையன்று தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெள்ளிக்கிழமையன்று நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை எதுவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடவில்லை.

author avatar
Parthipan K