ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0
69

ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கொரோனா தொற்று சற்று குறைந்ததன் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம்  மருத்துவக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளதால் தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் மீதுள்ள நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும்.

எனவே, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இரு தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author avatar
Parthipan K