அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு!

0
60

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு!

முல்லை பெரியாறு அணையின் ஆய்வு பணிக்காக பொதுபணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணைக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணை பகுதிக்கு செல்பவர்கள் வருகை பதிவேட்டில் தங்களது பெயர் மற்றும் தாங்கள் வருகை புரிந்ததற்கான காரணம் ஆகிய விவரங்களை எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு கடந்த 13-ந் தேதி அந்த அணைப்பகுதிக்கு ஓய்வுபெற்ற கேரள காவல்துறை அதிகாரிகளான அப்துல்சலாம், ஹக்கீம் மற்றும் டெல்லி மாநில காவல்துறை அதிகாரியான ஜான்சன், அவரது மகன் வர்க்கீஸ் ஆகிய நான்கு பேரும் தமிழக பொதுபணித்துறை படகில் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் அணைக்கு சென்றது குறித்து அங்குள்ள வருகைபதிவேட்டில் எந்த காரணமும் குறிப்பிடவில்லை. இதனால் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அணை பகுதிக்கு அனுமதியின்றி சென்ற அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் அணை பகுதிக்கு செல்வதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணை பகுதிக்கு செல்பவர்கள் வருகைபதிவேட்டில் அதற்கான காரணம் குறித்து பதிவிட வலியுறுத்தி வருகிறோம்.

எனவே அவர்கள் நான்கு பேரையும் அணை பகுதிக்கு கேரள அதிகாரிகள் எதற்காக அனுமதித்தார்கள் என்பது குறித்த விவரத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், தமிழக படகில் கேரளாவை சேர்ந்தவர்கள் எதற்காக ஏற்றிச் செல்லப்பட்டார்கள்? அதற்கு அனுமதி கொடுத்தது யார்? உள்ளிட்ட விவரங்களை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

author avatar
Parthipan K