சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

0
85

சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் என்பவரின் மீதான வருமான வரி நடவடிக்கைகளால் தான் அவரது நெருங்கிய நண்பரும் காபி டே நிறுவனருமான சித்தார்த்தா அவர்களும் வருமான வரிச் சோதனை வளையத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா நேத்ராவதி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. வருமான வரித் துறை கொடுத்த துன்புறுத்தல்கள், கடன் வழங்கியவர்களிடமிருந்து நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மனமுடைந்த சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து ஜூலை 31ஆம் தேதி அவரது சொந்த ஊரான சிக்கமகளூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சித்தார்த்தாவின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், தொழில் துறையினரும் அரசு அமைப்புகள் தொழில் துறையினரைப் பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சித்தார்த்தாவின் மரணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் சித்தார்த்தா கடைசியாக எழுதிய தற்கொலைக் கடிதம் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சித்தார்த்தா காணாமல் போன 29ஆம் தேதிக்கு முதல் நாளில், சித்தார்த்தா தன்னைச் சந்தித்துப் பேசியதாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். கடிதம் எழுதப்பட்ட அடுத்த நாளான ஜூலை 28ஆம் தேதி சிவக்குமாரைச் சித்தார்த்தா தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகவும், இருவரும் சந்திக்க முடியுமா என்று கேட்டதாகவும் சிவக்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். சித்தார்த்தாவின் கடிதம் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

வருமான வரித் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியின் வாயிலாகவும் கடும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், பங்கு விற்பனையில் கடும் நெருக்கடி கொடுத்ததால் கடுமையான நிதி நெருக்கடு ஏற்பட்டதாகவும் சித்தார்த்தா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித் துறை தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், ”கர்நாடகத்தில் பிரபலமான ஒரு அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்தார்த்தாவின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஒரு நபரின் விவரங்களும் கிடைத்தன. சிங்கப்பூர் நபரிடம் ரூ.1.20 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. அது சித்தார்த்தாவின் பணம்தான் என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்தார்” என்று கூறப்பட்டிருந்தது.

2017ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில்தான் சித்தார்த்தாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையின் சோதனைகள் நடந்தன. அதற்கு முன்னர் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித் துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சித்தார்த்தாவுக்கு நெருங்கிய நண்பரான சிவக்குமார் அவருடன் நிறையப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக வருமான வரித் துறை கூறுகிறது. சிவக்குமார்தான் வருமான வரிச் சோதனையின் முதன்மை இலக்கு எனவும், அவரது நட்பு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் காரணமாக சித்தார்த்தா மீதும் வரித் துறை நடவடிக்கைகள் பாய்ந்ததாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

2017ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மறுதேர்தல் சமயத்தில் 44 குஜராத் எம்.எல்.ஏக்களை பெங்களூருக்கு அருகில் உல்லாச விடுதி ஒன்றில் மறைத்து வைத்த விவகாரத்தில் சிவக்குமாருக்கு முக்கியப் பங்கு இருந்தது. சிவக்குமார் மீது ஊழல் தொடர்பான நடவடிக்கைகள் அதிகமாகப் பாய்துள்ளன. சிவக்குமாரின் நிதி சார்ந்த ஆலோசகர் சந்திரசேகர் மீதான தேடுதல் வேட்டையில்தான் சித்தார்த்தாவின் பெயர் அடிபட்டதாக வருமான வரித் துறையினர் கூறுகின்றனர். ஜூலை 31ஆம் தேதி ஓய்வுபெற்ற கர்நாடகா – கோவா பிராந்திய வருமான வரித் துறை தலைமை ஆணையரான பி.ஆர்.பாலகிருஷ்ணா இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார்.

2017 ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவக்குமார் மீதான வருமான வரித் துறையின் சோதனைகள் நடைபெற்றன. அவர் கஃபே காபி டே நிறுவனத்தில் பணப்பரிவர்த்தனை வைத்திருந்தது தெரிந்து சித்தார்த்தா மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் சித்தார்த்தா வைத்திருந்த 20.3 சதவிகிதப் பங்குகளை முடக்க வரித் துறையினர் அவசர கதியில் செயல்பட்டதாக காங்கிரஸ் எம்பியும், சிவக்குமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ் டைம்ஸ் ஆஃப் இந்தியாஊடகத்திடம் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையின் துவக்க காலத்திலேயே அவசர கதியாக சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் அவர்.

மேலும் படிக்க : பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

சிவக்குமார் மீதான வரிச் சோதனைகளில் மொத்தம் 79 பேர் மீது வரிச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிவக்குமார் விஷயத்தில் சித்தார்த்தாவை வேண்டுமென்றே இணைக்கப் பார்க்கிறார்கள் என்று சிவக்குமார் வழக்கில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here