எப்ப என்ன நடக்கும்னு தெரியல சீக்கிரமா வாங்க! உக்ரைனில் கதறும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள்!

0
53

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் நடைபெறும் ஆகவே உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில், அமெரிக்கர்கள் மெல்ல, மெல்ல, உக்ரைனிலிருந்து வெளியேற தொடங்கினார்கள்.

அதோடு ரஷ்யா, உக்ரைன், எல்லையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தன்னுடைய ராணுவத்தை நிலை நிறுத்தியது.இதனை அமெரிக்கா வன்மையாக கண்டித்தது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கணித்திருந்தது அமெரிக்கா.

அமெரிக்கா நினைத்ததைப் போலவே சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று தாக்குதல் தொடுத்தது.

போர் நடைபெறுவதற்கு முன்னரே உக்ரைனிலிருக்கும் வெளி நாட்டு மக்களை அந்தந்த நாடுகளுக்கு வருமாறு அந்தந்த நாடுகளின் தலைவர்கள் அழைத்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக, தற்போது போர் தொடங்கியிருக்கக்கூடிய சூழ்நிலையில், அவசர அவசரமாக உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

ஏற்கனவே 2 விமானம் மூலமாக 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள்.

ஆனாலும்கூட இன்னமும் பல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கே உண்ண உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிடும் பேட்டியை பார்க்கும்போது நமக்கே சற்றே துயரமாக தான் இருக்கிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் போர் தாக்குதல் வேகமெடுத்திருப்பதைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் பத்திரமாக இருக்குமாறு இந்திய அரசாங்கம் உக்ரைன் நாட்டிற்கான தூதரகம் மூலமாக அறிவுறுத்தியது.

அப்படி தூதரகம் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் படி அவர்கள் பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்தாலும்கூட அன்றாட தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் சிக்கலில் இருந்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக பெண்கள் கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் எதுவுமில்லாமல் தவித்து வருகிறார்கள். ஆகவே இவர்களை உடனடியாக இந்திய அரசாங்கம் மீட்டு வர வேண்டும் என்று எல்லோரும் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு ஏற்கனவே உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான பணியைத் தொடங்கியிருந்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் தங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும், எந்தவிதமான உத்திரவாதமுமில்லை என்று அங்கு இருக்கக்கூடிய இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் உள்ளிட்டோர் கடுமையான மன உளைச்சலிலிருக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.