போயஸ் தோட்ட இல்ல வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உயர் நீதிமன்றம்!

0
83

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்து இருந்தது. அதனை செயல்படுத்தும் விதத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு வேதா நிலையத்தையும், அங்கே இருக்கக்கூடிய அசையும் சொத்துக்களையும், அரசுடைமை ஆக்கியது அப்போதைய அதிமுக அரசு.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று சொல்லப்படும் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள் அதேபோல நிலையத்திற்கு 60 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும், வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரணை செய்து வந்தார்.

அந்த சமயத்தில் தீபா மற்றும் தீபக் உள்ளிட்டோரின் தரப்பில் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது குறித்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமை ஆக்கி இயற்றப்பட்ட சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியும் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அதோடு ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட எங்களிடம் எந்தவித யோசனையும் செய்யாமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது. வீட்டிற்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயம் செய்து அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு என்றும், தீபக் மற்றும் தீபா உள்ளிட்டோர் தரப்பில் வாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எல்லா வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் வழங்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.