வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து

0
92

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து

கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னியர்களுக்கு ஏற்கனவேயுள்ள MBC இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அதிமுக அரசு இயற்றியது.இதனை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கருத்து தெரிவித்து வந்தது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த 10.5 சதவீத வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது.

இதனைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமகவின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சரியென தீர்ப்பளித்தது.

ஆனால் போதிய தரவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரலாம் எனவும், அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தம்பி ஸ்டாலின் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தை பார்த்துக் கொள்வார் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் பாமகவின் சார்பாக அன்புமணி ராமதாஸ் மற்றும் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.அதே போல சட்டமன்றத்தில் பாமக தலைவர் GK மணி இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சாதகமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவை நம்பியிருந்த DNC பிரிவினர் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து இந்த 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவு கேட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று வன்னியர் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்களும் அண்ணாமலையை சந்தித்து 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு கேட்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பதை கூறியிருந்தார்.அதில் ஒரு தரப்பு இந்த சதவீதத்தை குறைக்கவும்,மற்றொரு தரப்பு இதைவிட அதிகமாக வேண்டும் என்றும் கேட்டதாக தெரிவித்திருந்தார்.மேலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து பாஜக இந்த 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதுவும் மாறாமல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.