மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்! பிரதமரை புகழ்ந்த அண்ணாமலை!

0
73

தமிழகத்தை சார்ந்தவர்களை மிகச்சிறப்பான பதவிகளில் அமர்த்துகின்றார் பிரதமர் நரேந்திர மோடி என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கின்றார். தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார், அதனை தொடர்ந்து அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் தமிழக பாஜகவின் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக பாஜகவின் தலைவர் என்ற பொறுப்புக்கு அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.

தற்சமயம் தஞ்சாவூரை சார்ந்த பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கையில் மேகாலயாவின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், கேரளாவில் முன்னாள் நீதிபதி சதாசிவம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் வரிசையில் தற்சமயம் இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தமிழர்களை சிறப்பான பதவிகளில் தமிழர்களை நியமிப்பதன் மூலமாக மீண்டும், மீண்டும் தமிழகத்திற்கு தான் வழங்கும் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திரமோடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

வாக்கு அரசியலுக்காக பதவிகளைக் கொடுக்காமல் நாட்டுக்காக உழைப்பவர்களை தேடிப்பிடித்து நல்ல பதவிகளை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.மிக விரைவில் மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் மூத்த தலைவர் கணேசனுக்கு பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும், எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.