பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசு

0

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசு

மத்தியில் வெற்றி பெற்ற பாஜக அரசு தமிழகத்திற்கு நலன் பயக்கும் திட்டமான கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அடுத்த சில நாட்களில் பதவியேற்க உள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து டுவிட்டர் பதிவில் விளக்கியுள்ள நிதின் கட்கரி,‘‘ எனது முதல் பணி கோதாவரி ஆற்றை கிருஷ்ணா ஆற்றுடன் இணைப்பது, கிருஷ்ணா ஆற்றை காவிரியுடன் இணைப்பது, அதன்மூலம் கோதாவரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழ்நாட்டின் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்வது தான்’’ என்று கூறியிருக்கிறார். தமிழகத்தின் மீதான அமைச்சரின் இந்த அக்கறை பாராட்டத்தக்கது.

தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தருவதற்காக கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருப்பது தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமான கோரிக்கை ஆகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மை ஆகும்.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் 1970-ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி ஆட்சியின் போதே நீர் மேலாண்மை வல்லுனர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் ஆகும். ஆனால், அப்போது அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் கூட நடத்தப்படவில்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு இப்போது செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இந்தியாவின் வற்றா நதிகளில் ஒன்றான கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இது தமிழகத்திற்கு கர்நாடக தர வேண்டிய காவிரி ஆற்று நீரின் அளவை விட 6 மடங்கு அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நதிகள் இணைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு குறைந்தது 200 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக இருக்கும். இது தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேளாண் தேவையை மட்டுமின்றி, குடிநீர் தேவையையும் நிறைவேற்றும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழகத்தின் நன்மைக்கான இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். மத்தியில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நரேந்திர மோடி அரசு மீண்டும் அமையவிருக்கும் நிலையில், அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இந்தத் திட்டம் காய்ந்த பூமியான தமிழகத்தை பசுமை பூமியாக மாற்றும்.

மக்களவைத் தேர்தலின் போதே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. திமுக அணி சார்பில் இத்தகைய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சாத்தியமில்லாத விஷயங்களைப் பேசி, அவர்களின் வாக்குகளை திமுக பறித்தது. மக்கள் ஆதரவளிக்காவிட்டாலும், அவர்களுக்கு பணி செய்வது தான் பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கை ஆகும். அந்த வகையில் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat