தமிழக நிலங்களை தன்னிச்சையாக தன்வசப்படுத்தும் கேரள அரசுக்கு வெண்சாமரம் வீசும் தமிழக அரசு! குதித்தெழுந்த பாஜக!

0
80

கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கேரளா அரசு எல்லை மறு அளவீடு செய்வதாக தெரிவித்து தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என்று பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள வலைதள பதிவில், தமிழக மற்றும் கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரளா அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களுடைய வருவாய் நிலங்கள் என்று ஆக்கிரமித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல நிலங்களில் வலுக்கட்டாயமாக இது கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையை வைத்து செல்வது நில ஆக்கிரமிப்பின் உச்சகட்டம் என்று தெரிவித்துள்ளார். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்து போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் அமைதியுடன் இருப்பது முறையல்ல.

இது தொடர்பாக நேற்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் மிக விரைவில் 2 மாநில அரசுகளும் ஒன்றிணைந்து மறு ஆய்வு நடத்தும் எனவும் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. வருமுன் காப்போம் என்றவர்கள், போன பின் காப்போம் என்று அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.

ஆகவே உடனடியாக தமிழக எல்லையில் அத்துமீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து மறு ஆய்வு பணியினை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்து அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த திமுக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டிக் கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.