குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

0
101

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

மழையும் குளிரும் வாட்டி எடுப்பது ஒரு பக்கம் என்றால், மிரட்டும் சரும பாதிப்பு மறு புறம். முடி கொட்டுதல் பிரச்சினை, சரும வறட்சி, பாத வெடிப்பு என்று, வரிசை கட்டி வரும். இந்த பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு என்று, யோசிக்கிறீர்களா… ரொம்ப சிம்பிள், இதுல சொல்லியிருக்கிறத பாலோ பண்ணுங்க அப்புறம் நீங்களே சொல்வீங்க இது எவ்வளவு சுலபம்னு.

சருமம்:
பொதுவாக குளிர்காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது, சருமம் தான். தோல் வறண்டு, செதில் செதிலாக உரிய ஆரம்பிக்கும். இதற்கு தீர்வு தண்ணீர் அதிகம் குடிப்பது தான். இந்த சீசனுக்கு தாகம் எடுக்காது தான், ஆனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

அதிகமான தண்ணீர் குடிப்பதால், தோலின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். வீட்டில் உள்ள தயிர், பால் போன்றவற்றைக் கொண்டு பேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம். மேலும் குளிப்பதற்கு முன், தேங்காய் எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 10-15 நிமிடங்கள் கழித்து, நலங்கு மாவு தேய்த்து குளிக்கலாம்.

அதிக சூடான நீரில் குளிப்பதால், சருமம் வறட்சியாகும். எனவே, வெதுவெதுப்பான சூட்டில் குளிக்கலாம். பப்பாளி, ஆப்பிள் ஆகியவற்றை குளிர்காலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், சருமத்திற்கு ஆரோக்கியம் தரும்.

உதடு:
குளிர்காலத்தில், பொதுவாக உதடுகள் வறட்சியடைந்து தோல் உரிய ஆரம்பிக்கும். உதடுகளை நாக்கால் அடிக்கடி ஈரப்படுத்தும் போதும், உதடு தோலைக் கடிப்பதன் மூலமும் கறுப்பு நிறமாக மாறி, அசிங்கமாக தோற்றமளிக்கும். இதற்கு எளிய தீர்வு, நெய் மற்றும் ஆலிவ் ஆயிலை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையடையும்.

இரவு தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சேர்க்காத வெண்ணெய் ஒரு டீஸ் பூன் கலந்து தேய்த்துக் கொள்ளவும். தொடர்ந்து ஒரு வாரம் இப்படி செய்தால், உதடுகள் இயற்கைச் சிகப்பழகு பெறும். கொத்தமல்லி சாறை அடிக்கடி உதடுகளில் தடவுவதன் மூலம், சிவந்த மென்மையான உதடுகளைப் பெற முடியும்.

முடி:
குளிர்காலத்தில் முடி உதிர்வதை தடுக்க முடியாது தான். ஆனாலும் கட்டுப்படுத்தலாம். இரவு தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு காலையில் தலைக்கு குளிக்கலாம். வாரம் ஒரு முறை சோற்றுக் கற்றாழைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்யலாம். உணவில் மீன், முட்டை, பச்சை காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், முடி உதிர்வை தவிர்க்கலாம். குளிக்கும் முன் வெங்காய சாறை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம், இதனால் முடி உதிர்வது கட்டுப்படும்.

முடி உதிர்வு அதிகமாக உடையவர்கள், முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்துடன், தயிர், கற்றாழை சதைப் பகுதி சேர்த்து மையாக அரைத்து, முடியின் வேர்க்கால்களில் படும் படி மசாஜ் செய்து 10 நிமிடத்திற்குப் பின் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால், முடி கொட்டுவது நின்று, நன்றாக வளர ஆரம்பிக்கும்.

இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க… குளிர்காலத்திலும் மின்னும் அழகுடன் ஜொலிங்க.

author avatar
Savitha