பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

0
67

பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இவர் அடையாறு சாஸ்திரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார், இவருக்கு இதயக் கோளாறு உண்டாகி இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று மாலை மாரடைப்பு காரணமாக, அவர் மரணமடைந்தார். அவருக்கு 73 வயது என்று சொல்லப்படுகிறது. இவர் பழம்பெரும் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன் என்று சொல்லப்படுகிறது.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார், ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களையும் இவர் பாடி இருக்கின்றார். மாணிக்கவிநாயகம் மறைவுக்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள், இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இன்று காலை 7 .30 மணி அளவில் சென்னை திருவான்மியூர் பகுதியில் இருக்கின்ற அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களும் சென்றிருந்தார்.

முன்னதாக மாணிக்கவிநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி குறிப்பில் பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 800க்கும் அதிகமான திரைப்பட பாடல்களைப் பாடி துண்பனாலும் துள்ளலானாலும், தன்னுடைய குரல் வளத்தால் அந்த உணர்வுகளை துல்லியமாக ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர்.

அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அளவற்ற அன்பை பொழிவார் அவர் அண்ணா அறிவாலயத்தில் என்னை சந்திக்கும் போதெல்லாம் மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த வழுவூர் மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன் அவருடைய பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகை சார்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறார்.