Ultimate magazine theme for WordPress.

ஆஸ்த்துமாவுக்கு குட்பை சொல்லலாம்!

0

ஆஸ்த்துமாவுக்கு குட்பை சொல்லலாம்!

உலகில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமாவும் உள்ளது. பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. தொடர்ந்து ஒருவருக்கு சளிப் பிடித்தால் அவர்களுக்கு 50% முதல் 70% வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது.

வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 5 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக டில்லியில் ஆஸ்மா நோய் பாதித்தவர்கள் அதிகம் உள்ளனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. ஆஸ்துமாவினால் இறப்பவர்களில் சுமார் 80% பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினராக இருக்கிறார்கள்.

கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால் கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக உட்கொண்டால், பிரச்சனைகள் ஏற்படாது.

சரி ஆஸ்துமா நுரையீரலை எப்படி பாதிக்கிறது தெரியுமா? தொற்று காரணமாக, மூச்சுக் குழலில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சு விடும் போது, சுருங்கிய சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது.

வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. குறிப்பாக மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

ஆஸ்துமா தாக்கியுள்ளதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். மூச்சுத் திணறல், அதுகமான வறட்டு இருமல், நெஞ்சு இறுக்கம், தொடர்ச்சியாக பேசுவதில் சிக்கல், மேலும் குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருக்கிறதால், சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்துமா மரபு வழி நோய்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சில பரிசோதனைகள் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம். நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (Lung Function Test), `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) ‘மெத்தகோலின் சேலஞ்ச் டெஸ்ட்’ (Methacholine Challenge Test), ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) இயந்திரப் பரிசோதனை, பீக் ஃப்ளோ பரிசோதனை செய்து, மூச்சுக்குழாயின் சுவாசப்பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என்பதை கண்டறியலாம். நோயின் வீரியத்தைப் பொறுத்து, மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹேலர் அளிக்கப்படும்.

ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும் போல சில பக்கவிளைவுகள் இருக்கின்றன. மாத்திரை வடிவில் அந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹேலர் வழியாக உறிஞ்சும்போது, மருந்து நேரடியாக நுரையீரலைச் சென்றடையும் என்பதால், பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.

ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகையச் சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆஸ்துமாவிலிருந்து தப்பலாம்.உடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பது மூலம் ஆஸ்துமாவை தவிர்க்கலாம். உதாரணமாக குளிர்ச்சி அளிக்கும் பழங்கள்,தயிர் போன்ற உணவு பொருட்களையும், செல்ல பிராணிகளை வளர்ப்பதை அல்லது கொஞ்சுவதை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தூசு பறக்கும் ஆலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கும், தூசி மற்றும் வாகனப் புகை பறக்கும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் மூக்கை மூடாமல் அதிகமாக பயணம் செய்பவர்களை ஆஸ்துமா தாக்கும் அபாயம் உள்ளது.

ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம். ஆஸ்துமா முற்றிவிட்டால்,பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்பதால், ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம். தியானம் (Meditations) ஆஸ்துமாவை குறைக்க உதவியாக இருக்கிறது.

ஆஸ்துமாவை மூச்சுப் பயிற்சி மூலம் சுலபமாக விரட்டி விடலாம். பதற்றம் இல்லா எளிய வாழ்வுமுறை மூலமும்,சுகாதார வாழ்க்கை முறை மூலமும் ஆஸ்துமா பாதிப்பை குறைக்கலாம்!

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat