தேர்தல் ஆணையத்தின் அந்த செயலால் ஏமாற்றமடைந்த கமல்!

0
67

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் ஆர் .கே நகர் இடைத்தேர்தல் நடந்தபோது டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார். அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் தினகரன் ஆரம்பித்த நிலையிலே மக்களவைத் தேர்தல், மற்றும் சட்டசபை இடைத்தேர்தலிலும், போட்டியிடுவதற்காக அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை கேட்டு தினகரன் மிகக் கடுமையாக போராடினார்.

ஆனாலும்கூட குக்கரை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பெயரில் பரிசுப்பெட்டி சின்னத்தை அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அந்த சின்னத்தில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல கடந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சட்டசபை தேர்தலுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் நேற்றையதினம் ஒதுக்கி இருக்கின்றது. அதன்படி தமிழகம், மற்றும் புதுச்சேரி, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி இருக்கின்றது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டி. டி வி. தினகரன் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுடைய நல்லாசிகளை பெற்றிருக்கும் நம்முடைய கட்சி, வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தை பெற்றிருக்கின்றது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன், என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

அதேபோல நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் நீதி மையம் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டுமே டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது . தமிழ்நாட்டில் டார்ச் லைட் சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஏமாற்றமடைந்த கமல்ஹாசன், மாற்று சின்னத்தில் போட்டியிடும் நிலை உருவாகியிருக்கின்றது.

திண்டுக்கல்லில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், வெறும் ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.