சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்  போல வலம் வந்த ஆசாமிகள்! நோயாளிகள் அதிர்ச்சி!

0
90
assailants-came-like-doctors-in-salem-government-hospital-patients-shocked

சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்  போல வலம் வந்த ஆசாமிகள்! நோயாளிகள் அதிர்ச்சி!

சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று 2 வாலிபர்கள் டாக்டர் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு வந்தனர்.
பின்னர் இருவரும் நேராக கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர் . பிறகு  அங்கிருந்த செவிலியரிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை கூறும் படியும்  கேட்டுள்ளனர்.
இதனால்  சந்தேகம் அடைந்த செவிலியர்  இது குறித்து மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மருத்துவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து அரசு மருத்துவ புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் . அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியை சேர்ந்த சல்மான் (23) மற்றும்  சேலம் தளவாய்ப்பட்டி அருகே உள்ள சித்தர்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பதும்  தெரிய வந்தது.  இதனைதொடர்ந்து டாக்டர் வேடம் அணிந்து வந்ததும் தெரிய வந்தது . இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சல்மான் மற்றும்  கார்த்திகேயன் இருவரும் 8ஆம்  வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளனர். இருவரும் முகநூலில் பேசிக்கொள்ளும் பொழுது டாக்டர்கள் போன்று பேசுவதை வழக்கமாக கொண்டவர்கள். மேலும் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு நோயாளிகள் கொடுக்கும் மரியாதையை பார்த்து அதே போன்று அவர்களுக்கும் நோயாளிகள் மரியாதை கொடுப்பதை காண வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு செய்தார்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் டாக்டர் வேடம் அணிந்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K