ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகிறார் ஒபிஎஸ்!

0
71

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமிருக்கிறது அது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் குதித்தவர் தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்.

இந்த சூழ்நிலையில், பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

இந்த நிலையில், அந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்தி வந்தது.இதற்கிடையில். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திடீரென இந்த ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது.

இந்த சூழ்நிலையில், மீண்டும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்தி வருகிறது இதுவரை 754 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், அனைவரையும் விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இதுவரையில் 8 முறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

ஆனால் இதுவரையில் பல்வேறு காரணங்களை தெரிவித்து அவர் விசாரணை ஆணையத்திற்கு முன்பாக ஆஜராகி தனது விளக்கத்தை கொடுக்கவில்லை. மேலும் பலமுறை விசாரணை ஆணையமே சில காரணங்களை முன்னிறுத்தி அவரை விசாரிப்பதை தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நேற்று காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கிவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

பன்னீர்செல்வத்திடம் இன்னமும் 20க்கும் மேற்பட்ட கேள்விகளை விசாரணை ஆணையம் தரப்பில் கேட்க வேண்டிய நிலையிலிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவர் இன்று மறுபடியும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகவிருக்கிறார்.

ஆணையத்தின் விசாரணை முடிவடைந்ததும் சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை, உள்ளிட்டோரின் சார்பாக பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.