கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

0
85

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கைது செய்யவேண்டும் என டிவிட்டரில் ஹேஷ்டேக் பரவியது குழப்பங்களை ஏற்படுத்தியது.

திடீரென்று இன்று காலை #Arrestkohli என்ற ஹேஷ்டேக் இணையத்தில் அதிகளவில் பரப்பப்பட்டது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழம்பினர். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலை சம்பவம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஐடிஐ முடித்து சென்னையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் வெளிநாடு செல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து விசாவுக்காக ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடூரமான முறையில் இறந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் வீட்டைச் சென்ற விக்னேஷ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் ஊருக்கு வெளியே தலையில் பலத்த காயம்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் நடந்த விசாரணையில் விக்னேஷ், தர்மராஜ் மற்றும் பிரபாகரன் ஆகிய நண்பர்கள் மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது பேச்சுவாக்கில் இந்திய அணியின் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை விக்னேஷ் கேலி செய்து பேசியுள்ளார். மேலும் அவர்களை தர்மராஜின் திக்குவாயோடு இணைத்து பேசியதால் தர்மராஜ் கோபமடைந்து, அவரை தாக்கிக் கொலை செய்துள்ளதாக ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நடந்த சம்பவத்துக்குக் கோலி எப்படி பொறுப்பேற்க முடியும். அவரை ஏன் கைது செய்யவேண்டும். எதற்காக இப்படி முட்டாள்தனமாக ஹேஷ்டேக் பரப்பப் பட்டது என பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.