கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!!

0
218
Arikomban elephant roaming around Kambam area!! Public fear!!
Arikomban elephant roaming around Kambam area!! Public fear!!

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!!

கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. கடந்த வாரம் கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி பொருத்தப் பட்டது. இதன் மூலம் யானையின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் இந்த யானை மங்கள தேவி கோவில் வழியாக தமிழக வனப்பகுதியில் நுழைந்தது.

அந்த வனப்பகுதியிலேயே சுற்றி திரிந்ததை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். பிறகு நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து தேனி மாவட்டம் லோயர்கேம்ப் மலையடிவாரத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது. இதனை தொடர்ந்து காவல் துறையினரும், வனத்துறையினரும் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டே இருந்தனர்.

இன்று காலை 5 மணிக்கு கம்பம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் யானை சுற்றிக் கொண்டிருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.  அங்கிருந்து மக்கள் நடமாட்டம் உள்ள நடராஜன் திருமண மண்டபம் பின்புறத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்குள் நுழைந்தது. பின்னர் ஏகழூத்து சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவகத்திற்கு அருகே நின்று, அப்படியே நந்தகோபாலன் கோவில் தெரு வழியாக நாட்டுக்கல் பகுதியை வந்தடைதுள்ளது. சுமார் 3 மணி நேரமாக உலா வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதனால் கம்பம் நகர் பகுதி முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார். கம்பம் நகர் பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் பொது மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும், வனத்துறையினரும் அந்த பகுதிகளை ஒழுங்கு படுத்தி கொண்டிருக்கின்றனர்.

அந்த பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளன.  யானை, குடியிருப்புப்  பகுதிகளில் செல்லாதவாறு பெரிய லாரிகள், டிராக்டர்கள் போன்ற கனரக வாகனங்கள் அந்த பகுதி தெரு முனைகளிலும், சந்துகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரிக்கொம்பன் யானையை பிடிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இதற்காக பொள்ளாச்சி யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானையை வரவழைத்து அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அரிக்கொம்பன் குடியிருப்பு பகுதியில் நுழைந்ததில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

author avatar
CineDesk