சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! திங்கள்கிழமை விசாரணை!

0
83

கண்ட ஜூன் மாதம் 23ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆனால் அன்றைய தினம் எந்த விதமான முடிவும் எடுக்கப்படாமல் அந்த கூட்டம் முடிவுற்றது.

இதனை தொடர்ந்து சென்ற மாதம் 11ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று சென்னையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை எதிர் வரும் திங்கள்கிழமை விசாரிப்பதற்கு நீதிபதிகள் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.

தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று வழங்கிய தீர்ப்பில் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு செல்லத்தக்கதல்ல என்று தெரிவித்தார். அதோடு அன்றைய தினம் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது.

ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைமையே அதிமுகவில் தொடரும் என்று தெரிவித்தார். இதனையடுத்து மேல்முறையீடு செய்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் துரைசாமி சுந்தர் மோகன் அமர் முன்பு ஆஜராகி தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், கோரிக்கையை வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த மனுவை எதிர்வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.