முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!

0
111

அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி கொடுக்காமலும், 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள், அவருடைய உதவியாளர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுகவில் பல முன்னாள் அமைச்சர்கள் இருந்தாலும் இவர் மீது திமுக தலைமைக்கு தனிப்பட்ட முறையில் வன்மம் இருப்பதாக ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள். காரணம் இவர் அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே இவர் மீது மட்டும் தனி வன்மத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திரபாலாஜி அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது.

மதுரை, தென்காசி, கோவை, பெங்களூர் மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. அதோடு சைபர் கிரைம் காவல்துறையினர் மூலமாக ராஜேந்திரபாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தன்னுடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். மேலும் அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், ராஜேந்திரபாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்ற காரணத்திற்காக, விமான நிலையங்களுக்கு லுக்கவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கிக் கொடுப்பதாக தெரிவித்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சாத்தூரை சார்ந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கியிருக்கிறார். விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வந்த புகாரில் முகாந்திரம் இருக்கிறதா? என்று காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து மோசடி செய்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி தேடப்பட்டு வரும் சூழ்நிலையில், மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.