20 கோடிக்கு மேலான சான்றிதழ்கள் அண்ணா யுனிவர்சிட்டியில் வீணானது! கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்!

0
67

சட்டப்பேரவைக்கூட்ட தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு தணிக்கை அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலராக செயல்பட்ட உமா முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது காலத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை டிஜிட்டல் மையம் ஆக்குவதற்கு தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலமாக 11 கோடியே 41 லட்சம் ரூபாய் நஷ்டம் உண்டானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய மாணவர்களின் சான்றிதழ்களின் எண்ணிக்கை 7,33,720 ஆனால் 20,92,035 சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளது தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரச் சான்றிதழ் தற்காலிக சான்றிதழ் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் பட்டய சான்றிதழ் உள்ளிட்டவற்றை அச்சிடுவதற்காக வாங்கப்பட்ட வேற்று சான்றிதழ்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. அந்த விதத்தில், கடந்த 2016 ஆம் வருடம் தேவைப்படும் 17,15,441 சான்றிதழ்களுக்கு பதிலாக 1,63,30,000 வெற்றுச்சான்றிதழ்கள் 57 கோடி ரூபாய்க்கு அச்சிடப்பட்டுள்ளது.

அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 50 சதவீத சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது சான்றிதழ்களின் வடிவத்தை மாற்றியதால் 24.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெற்று சான்றிதழ்களை தற்போது பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டிருப்பதாக கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்றவாறு வெற்று சான்றிதழ்களை அச்சிட்டு இருந்தால் இந்த மிகப்பெரிய இழப்பை தவிர்த்திருக்க முடியும் எனவும் கணக்கு தணிக்கை துறையின் அறிக்கை கூறியுள்ளது. அந்த விதத்தில் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குவதில் நடந்த முறைகேடு மற்றும் தேவைக்கு அதிகமான வெற்றுச் சான்றிதழ்களை முறைகேடாக வாங்கியதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 35 கோடியே 90 லட்சம் ஒட்டுமொத்தமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.