தமிழக அரசு எதிர்க்கும் திட்டத்தை ஆதரிக்கும் ஆந்திர அரசு! குஷியில் மத்திய அரசு!

0
93

மத்திய அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் கேடர்களுக்கான விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர சட்ட முன்விவு கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், மாநில அரசுகள் தங்களிடம் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒரு பங்கை மத்திய அரசுப் பணிகளுக்கு ஒதுக்கி பட்டியலை அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு ஒதுக்கப்படும் பெயர் பட்டியலில் இருக்கும் அதிகாரிகளை, மாநில அரசுகளின் அனுமதி இன்றி எப்போது வேண்டுமானாலும், மத்திய அரசுப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளலாம். இதனால், மத்திய அரசுப் பணிகள் விரைவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வாறு அதிகாரிகளின் பட்டியலை கொடுத்தால், மாநில அரசுகளின் பணிகள் முடங்கும் என்றும், அந்த அதிகாரிகளை முக்கிய திட்டங்களில் பயன்படுத்த முடியாது என்பதால், மாநில அரசுகள் முடங்கும் ஆபத்து இருப்பதாகவும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளாத மற்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இதே போன்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இதே கருத்தை வெளிப்படுத்தி மத்திய அரசுக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளார். கேரளா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், தெலுங்கானா அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அரசுத் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நல்லது என்றும், ஆனால் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இட ஒதுக்கீட்டுக்கான துணைப் பிரிவில் பி மற்றும் சி ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசுகளில் முக்கிய அங்கம் வகிப்பதால், அவர்களை மத்திய அரசுப் பணிகளில் எடுத்துக் கொள்ளும் போது, தொடர்புடைய மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வர வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.