ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம் தயவு செய்து ஊரடங்கை மதித்து நடப்பீர்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

0
57
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம் தயவு செய்து ஊரடங்கை மதித்து நடப்பீர்!அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்டு பொது மக்கள் சாலைகளில் நடமாடி வருவது வேதனை அளிக்கிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன. ஒருபுறம் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், அதுகுறித்த அச்சம் எதுவுமே இல்லாமல் ஊரடங்கு குறித்த அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்டு, பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருவது மிகவும் வேதனையளிக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இன்று ஆயிரத்தை கடந்து 1048 ஆக உள்ளது. கடந்த மார்ச் 22&ஆம் தேதி 360&ஆக இருந்த பாதித்தோர் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 700 அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 25 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை 43&ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது எவரும் எதிர்பார்க்காத வேகமாகும். பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ பயணம் மேற்கொள்ளாதவர்கள்; அதேபோல், பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள். இத்தகைய சூழலில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, இந்தியாவில் சமூகப்பரவல் தொடங்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு ஆணை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றை மதித்து நடப்பது தான் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நாம் செய்யும் உதவியாகும்.

ஆனால், களத்தில் நடப்பது என்ன?

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்பது விதி. வீட்டை விட்டு ஓர் அடி வெளியில் வந்தால் கூட கொரோனா உங்கள் வீட்டுக்கு வந்து விடும் என்று பிரதமர் எச்சரித்திருக்கிறார். ஆனால், அவை குறித்த புரிதலோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் பொது மக்கள் சாலைகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வது தவிர்க்க முடியாதது தான் என்றாலும் கூட, அரசின் அறிவுரைகளை மதித்து, எப்போதாவது ஒரு நாள் தான் வெளியில் வர வேண்டும். ஆனால், சாலைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவும், ஊரடங்கை மீறி வெளியில் செல்வதே ஒரு சாகசம் என்ற எண்ணத்திலும் தான் ஏராளமானவர்கள் சாலைகளில் தடைகளை மீறி நடமாடிக்கொண்டிருக்கின்றனர். இது தேவையற்றது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அதிகாலை முதல் இறைச்சிக் கடைகளிலும், மீன் சந்தைகளிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி நிற்கின்றனர். அந்த இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற புரிதல் மக்களுக்கும் இல்லை; பெரும்பாலான வணிகர்களுக்கும் இல்லை. சென்னையில் பல சந்தைகளில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தும் கூட, ஒழுங்கற்ற நிலையே நீடித்தது. பல இடங்களில் இறைச்சி வாங்க போட்டியே நடந்தது. இறைச்சியை இன்று இல்லாவிட்டாலும் நாளை சாப்பிடலாம். ஆனால், கட்டுப்பாடற்ற செயல்பாடுகளின் மூலம் கொரோனா வைரஸ் நோய் சமூக அளவில் பரவத் தொடங்கி விட்டால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

கொரோனா வைரஸ் உலகில் எத்தனை கொடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்…..

உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய தெரசா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் உயிரிழந்திருக்கிறார். இங்கிலாந்தில் அந்நாட்டு இளவரசர் சார்லசும், பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அசைக்க முடியாதவர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட இன்று கொரோனாவைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பில்லாதவர்கள் என்று எவரும் இல்லை. எனவே, தமிழக மக்கள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியமாக கருதாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் கடமை ஆகும். அதை மதிக்காமல் விருப்பம் போல செயல்படுவது மலை உச்சியின் விளிம்பில் நின்று கொண்டு நடனமாடுவதற்கு சமமானது ஆகும். ஊரடங்கு என்பது சற்று கடுமையாகத் தான் இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் அதைத் தவிர வழியில்லை என்பதால், பொதுமக்கள் சில சிரமங்களை பொறுத்துக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதேநேரத்தில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதையும், அவ்வாறு வெளியில் வந்தால் எடுக்கப்படவிருக்கும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் தண்டோரா, ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

CoronaVirusOutbreak #SocialDistancing #21DaysLockDown

author avatar
Ammasi Manickam