இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

0
59
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்து வரும் சூழலில் வெளி மாநிலங்களில் பணிபுரிய வந்தவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்தவர்கள் அவர்கள் ஊருக்கு செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இன்று அவர் “இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் இப்போது வரையிலான 40 நாட்களாக அவர்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர். தங்குவதற்கு இடமும், உண்ண உணவும் இல்லாமல் தவித்த அவர்கள், ஏதாவது ஒரு வழியில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றனர். ஆனால், அவர்களால் நோய்ப் பரவி விடக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதாலும், பல புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் தான் அவர்கள் வாழும் பகுதிகளில் மாநில அரசு ஏற்படுத்தித் தந்த முகாம்களில் 40 நாட்களாக தங்கியிருந்தனர். உழைத்து சேமித்த பணம் முழுவதையும் செலவழித்து விட்டு, அடுத்த வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் அவர்களிடம் கட்டணம் செலுத்தும்படி ரயில்வே நிர்வாகம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவத் தொடங்கிய போது சீனா, ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தவித்த இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அதற்காக ஜனவரி 31-ஆம் தேதியிலிருந்து மார்ச் 22-ஆம் தேதி வரை ஏராளமான சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து காலியாக சென்று பயணிகளை ஏற்றி வந்தன. வணிக நோக்கத்தில் பார்த்தால் அதற்காக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒருவரிடமிருந்து கூட, ஒரு ரூபாய் கூட கட்டணமாக வசூலிக்கப்படவில்லை. மாறாக, அந்த தொகையை ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசே செலுத்தி விட்டது.

விமானத்தில் பயணம் செய்தவகளுடன் ஒப்பிடும் போது, தொடர்வண்டிகளில் இப்போது பயணிக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. அவர்கள் சொந்த ஊர்களில் வாழ வழியில்லாமல் தான் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஊர்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். அவ்வாறு பணியாற்றும் போதும் கூட கடுமையான உழைப்பு சுரண்டல்களுக்கு ஆளாகின்றனர். ஆனாலும் சொந்த ஊர்களில் இருந்தால் அதற்கு கூட வழியில்லை என்பதால் தான் உழைப்புச் சுரண்டல்களை பொறுத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

இப்போதும் கூட நோய் பயம் காரணமாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்ற அச்சம் காரணமாகவும் தான் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நிலைமை சீரடைந்து அவர்கள் பணிக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை ரயில்வே கைவிட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்தவர்கள் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட போது, எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறை இப்போதும் பின்பற்றப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டமிண்றி அழைத்துச் சென்று விட்டு, அதற்கான கட்டணத்தை மத்திய அரசிடம் தொடர்வண்டித்துறை வசூலித்துக் கொள்ள வேண்டும். தொடர்வண்டித்துறை அறப்பணிகளுக்காக செலவிடும் தொகையுடன் ஒப்பிடும் போது இதற்கான செலவு மிகவும் குறைவாகும். அதேபோல், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்காக மத்திய அரசு இதுவரை ரூ. 3 லட்சம் கோடிக்கும் கூடுதலாக செலவழித்துள்ள நிலையில் இந்த செலவு ஒரு சுமையல்ல. எனவே, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் இலவசமாக சொந்த ஊர் செல்லலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசும், தொடர்வண்டித்துறையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam