வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்

0
139
#image_title

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்!

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம் பிடித்ததால்  சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (வயது 44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள இவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சிறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று திடீரென வார்டில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர், மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி ராஜா, மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் முதலாவதாக ஆட்டோவில் ஏறுவது போல் சென்று , பின்னர் ஆரணி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் தப்பியோடிய விசாரணை கைதி ராஜாவை தேடி வருகின்றனர். மேலும்,தப்பி ஓடிய கைதியை பார்த்தாலோ அல்லது தகவல் கிடைத்தாலோ வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81231 என்ற என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

author avatar
Savitha