14ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர்! காரணம் என்ன தெரியுமா?

0
81

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி மாதம் 14ஆம் தேதி மறுபடியும் சென்னை வர இருக்கின்றார். இது பாஜக தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வரும் போது அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான நேரம் நெருங்கி வந்து கொண்டே இருப்பதால், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தலை சந்திப்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த விவரங்களும் காய்நகர்த்தல்களும், தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையிலே, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணி வரும் சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று உறுதி ஆகி இருக்கின்றது . அதேபோல முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துகின்ற நிலையிலே, அதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் முன்னரே நவம்பர் மாதம் 21ஆம் தேதி அமித்ஷா சென்னை வந்திருந்தார். இப்பொழுது ரஜினி அரசியல் முடிவு பாஜக மற்றும் அவருடைய ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அவர் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு போன்ற முடிவுகளை இறுதி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல சட்டசபை தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருப்பதாகவும்,தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் தொடர்பாகவும் அவர் விசாரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வரும் பாஜக அதில் 38 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக முன்னரே அதற்கான தொகுதி மற்றும் வாக்காளர் பட்டியலையும், தமிழக பாஜக தேசியத் தலைமைக்கு அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை அந்த கட்சியின் தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.