முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

0
61

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 70 நாட்களுக்கு பிறகு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக, தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அதன்பிறகு நேர் எதிர் துருவங்களாக இருந்த இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இடையே சமரசம் ஏற்பட ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அப்பல்லோ மருத்துவமனை இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து அப்போலோ மருத்துவமனை சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான உத்தரவை உச்ச நீதி மன்றம் சார்பாக இணைய தளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி அனைத்திற்கு உதவுவதற்கு மருத்துவ குழுவை நியமிப்பது சரியாகவும், பொருத்தமாகவும், இருக்கும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த நிபுணர்கள் கொண்ட மருத்துவ குழுவை டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் நியமனம் செய்ய வேண்டும்.

அவ்வாறு நியமனம் செய்யப்படும் மருத்துவக் குழுவிடம் ஆணையத்தின் ஒட்டுமொத்த விசாரணை ஆவணங்களையும் வழங்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் இந்த மருத்துவர்கள் பங்கு பெறவேண்டும், விசாரணையில் பங்கு பெற்று அதற்கான அறிக்கையை ஆணையத்திடமும், அப்பல்லோ மருத்துவமனையை நிர்வாகத்திடமும், சசிகலாவிடம் மருத்துவக்குழு வழங்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.