சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!

0
197
Edappadi Palanisamy with Elangovan
Edappadi Palanisamy with Elangovan

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது மேற்கு மாவட்டங்களே. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று அசுர பலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பாமக வலிமையான வாக்கு வங்கியை பெற்றிருந்த போதும், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கிடைத்த அளவுக்கு, மற்ற மாவட்டங்களில் அக்கட்சிக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனால், அதிமுக – பாமக கூட்டணி சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டம் ஆகும். அவர்களில் பெரும்பாலானோர் அதிமுக மற்றும் பாமகவின் வலுவான வாக்கு வங்கிக்கு அடித்தளமாக உள்ளனர். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கும், அந்த தொகுதியில் 60 சதவிகிததிற்க்கும் மேல் வசிக்கும் வன்னியர்களே முக்கிய காரணமாக அமைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் மிகவும் சிறுபான்மையாக இருக்கும் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, வன்னியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பதன் காரணமாகவே, அம்மாவட்டத்தில் அதிமுக மீண்டும் ஒரு வலிமையான வெற்றியை ஈட்டுவதற்கு காரணமாக அமைந்தது.

ஆனாலும், அண்மையில் நடந்து முடிந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் தேர்வில், கடந்த 11 வருடமாக விடாமல் தக்கவைத்துக் கொண்டிருந்த, புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பை, எடப்பாடி தமது வலது கரமாகக் கருதப்பட்ட இளங்கோவனுக்கு விட்டுக் கொடுத்தார். இது அம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னிய கவுண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வன்னியர் சமூகத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர்களில் ஒருவரான வையாபுரி என்பவர், தமது பதவியையே ராஜினாமா செய்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தார்.

Edappadi Palanisamy with Elangovan
Edappadi Palanisamy with Elangovan

எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான கருதப்பட்ட கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கடந்த ஆட்சியில் நிழல் முதல்வராகவே வலம் வந்தார். எனினும், மாவட்ட செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புக்கு, மாவட்டம் முழுவதும் தேடினால் கூட 10 – 15 ஆயிரம் வாக்கு எண்ணிக்கை இல்லாத சமூகப் பின்னணி கொண்ட இளங்கோவனுக்கு, புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தை சேர்ந்த இளங்கோவன், பல்வேறு வழக்குகளின் விசாரணை வளையத்துக்குள் இருப்பவர். குறிப்பாக கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கிலும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இருந்து தமக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், தப்பித்துக் கொள்வதற்காகவே, எடப்பாடி இதுவரை தாம் வகித்து வந்த புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார் என்றும் அதிமுகவில் பேச்சு அடிபடுகிறது.

எது எப்படி இருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மாவட்டம் சேலம். குறிப்பாக அம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர்கள். நிலைமை அப்படி இருக்கும்போது, தங்களது சுயநலத்திற்காக, கட்சியை பலி கொடுப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்பதே, சேலம் மாவட்ட அதிமுகவில் இன்று ஒலிக்கும் முக்கிய குரலாக உள்ளது.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இளங்கோவன் நீடித்தால், அது கட்சியின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பது, எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும். எனவே, தனி நபருக்காக கட்சியை பலி கொடுக்கும் முடிவில் இருந்து அவர் பின்வாங்க வேண்டும் என்பதே அக்கட்சியினரின் கோரிக்கை.

எனவே, சேலம் மாவட்ட அதிமுகவின் எதிர்காலம் எடப்பாடி கையில்தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் அதிமுகவினர்.

-பத்திரிக்கையாளர் ராஜேந்திரன் பழனிவேல்