தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

0
68

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அந்தவிதத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் ஆரம்பமானது. சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் தமிழக பாஜக தலைவர், மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி , தேர்தல் பொறுப்பாளர் சி.டி ரவி போன்றோர் முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர இருக்கிறார். அந்த சமயத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. அமித்ஷா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இடையே தொகுதி பங்கீடு இன்றைய தினம் முடிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மாலை 5 மணி அளவில் சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கின்ற லீலா பேலஸ் சொகுசு விடுதியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிகிறது. அதன்பிறகு தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 22 இடங்களும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும் ஒதுக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.