அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

0
76

சசிகலாவின் விடுதலையை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும், தற்போது அதிமுகவில் இருக்கும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் ஆளுங்கட்சியை சசிகலா கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி கொண்டு இருக்கிறார்கள்.

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் சசிகலா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் அதேபோல சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் சசிகலா தமிழகம் வந்ததும் அவரை நேரில் சென்று சந்திப்பேன் என்று தெரிவிக்கிறார். அதே போல இங்கே இருக்கக்கூடிய பலர் சசிகலாவால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைவது நடக்காத காரியம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்து இருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்து வரும் நமது எம்ஜிஆர் நாளிதழில் சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுப்பதை எந்த கொம்பனாலும் தடுத்து விட இயலாது என்று ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதற்கான கேள்விகளுக்கு தான் இப்படி ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.