இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! 

0
255
#image_title

இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!!

நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் தென்னரசு போட்டியிட்டனர். இவர்களுக்கு இடையேதான் முக்கிய போட்டி என்றாலும், திமுகவினருக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு கெளரவ பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது.

எனவே ஒட்டுமொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அனைத்து எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட திமுகவின் ஒட்டுமொத்த பலத்தையும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் களம் இறக்கினார் முதல்வர் ஸ்டாலின். இது ஒரு பக்கம் இருந்தாலும், நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை போல அதிமுகவின் எடப்பாடி அணியும், தங்களது முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் எம்எல்ஏ-எம்பிக்களையும் களம் காண வைத்தது, பிப்ரவரி 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், அன்றிலிருந்து தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் மழையில் நனைய தொடங்கினர், ஆம் பணம் என்னும் மழையில் தினம் தினம் நனைய தொடங்கினர்.

தினமும் வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு, பிரச்சாரத்திற்கு சென்று நாளொன்றுக்கு 1000 ரூபாய் வரை சம்பாதித்தனர். இதனால் மது கடைகளிலும், ஓட்டல்களிலும், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கல்லா பெட்டிகளை அலங்கரித்தன, இது மட்டுமா தினம் ஒரு பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் அத்தொகுதி மக்களுக்கு வாரி வழங்கினர்.

நான்கு வாக்காளர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள், பணம் ஆகியவை கிடைத்தன, மேலும் தேர்தல் நேரம் நெருங்க நெருங்க தங்களுக்கு இன்னும் ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்துடனே வழிமேல் விழிவைத்து காத்து கிடந்த வாக்காளர்களுக்கு, இறுதி கட்ட காட்சியாக டோக்கன் வழங்கப்பட்டது.

இந்த டோக்கன்களில் மளிகை பொருட்கள் அல்லது எலக்ட்ரானிக், எலெக்ட்ரிக் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று ஆசையை தூண்டிவிட்டு டோக்கன்களை அள்ளி வழங்கினர் அரசியல் கட்சியினர்.

ஆனால் அங்கு தான் மக்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற வேட்பாளரும் பதவி ஏற்று எம்எல்ஏ ஆன போதிலும், அரசியல் கட்சியினர் கொடுத்த அந்த டோக்கன்களோடு, தங்களுக்கு ஏதாவது மீண்டும் கிடைக்குமா என்ற ஏக்கத்துடனே காத்துகிடக்கின்றனர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்.