உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை!

0
71

அதிமுகவுக்கும், பாஜகவுக்கும், இடையே கூட்டணி உள்ளதா? அல்லது இல்லையா? என்ற கேள்வி இரண்டு கட்சியினர் இடையே மட்டுமின்றி அனைத்து கட்சியினர் இடையே அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கும் ஒரு செய்தியாக மாறிப்போனது.

இந்த நிலையிலே, அதிமுகவின் மூத்த தலைவரும் பெரிய அதிகாரம் படைத்த முன்னாள் சட்டசபையின் தலைவருமான பி .ஹெச் . பாண்டியனின் சிலை திறப்பு விழாவானது ஜனவரி மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்தேறியது.

அன்றைய தினம் காலை சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கு இருந்து தூத்துக்குடிக்கு கிளம்பி சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திறந்தவெளி காரில் வந்து சேர்ந்தார்கள்.

முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், இடையே சில பல முரண்பாடுகள் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்ற நிலையிலே, இருவரும் ஒரே வாகனத்தில் இரட்டை இலையை காட்டியபடி வந்தது அந்த கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே இருக்கின்ற கோவிந்தப்பேரி என்ற கிராமத்தில், பி .ஹெச் . பாண்டியனின் சிலை திறப்பு விழா முடிந்த பிறகு நேற்று மாலை முதலமைச்சரும், துணை முதல்வரும், அம்பாசமுத்திரம் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் வான முருகையா பாண்டியன் இல்லத்திற்கு சென்றடைந்தார்கள்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஓய்வில் இருந்து வரும் முருகையா பாண்டியனை சந்திக்க முதல்வரும், துணை முதல்வரும் ,அவர் இல்லத்திற்கு சென்ற நேரத்தில் அவர்களோடு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி .முனுசாமி ,அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், போன்றோர் முருகையா பாண்டியன் அவர்களை சந்தித்துவிட்டு அவரது இல்லத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட போது, தலைவர்களிடையே தென் மாவட்ட நிலவரம் தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், பொதுவாக பேச்சுக்கள் எழுந்தன.

அந்த சமயத்தில் கே.பி. முனுசாமி பாஜக கூட்டணி நமக்கு தேவையில்லை.அவர்களுக்குத் தான் நாம் தேவை என்று தொடங்க, முதல்வர் ,மற்றும் துணை முதல்வர் ,முன்னிலையிலேயே மற்ற பலரும் பாஜகவுடன் கூட்டணி தேவை இல்லை. சிறுபான்மையினர் ஓட்டுகள் திமுகவிற்கு எப்பொழுதும் முழுமையாக சென்றது கிடையாது. நாம் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் மட்டுமே சிறுபான்மையினர் ஓட்டுக்கள் நமக்கு கிடைப்பதில்லை. ஆகவே பாஜக கூட்டணியை தைரியமாக தவிர்த்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம். இதை நீங்கள் சென்னை வரும் அமித்ஷாவை சந்தித்து தெரிவித்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை நோக்க ,கட்சியில் அனைவரும் இவ்வாறு நினைத்தால் கட்சி முடிவுதான் நம்முடைய முடிவு என்று பன்னீர் செல்வம் அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டு வந்திருக்கிறார்.

சென்ற நவம்பர் மாதம் 21 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், அமித்ஷா முன்னிலையிலேயே அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவருக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் , அம்பாசமுத்திரத்தில் அதிமுகவின் நிர்வாகிகள், முதல்வர் ,மற்றும் துணை முதல்வர் ,இருவரின் முன்னிலையிலும் பாஜக கூட்டணி தேவையில்லை என அமித்ஷாவிடம் தெரிவித்து விடுங்கள் என தெரிவித்திருப்பது தான் அதிமுகவின் ஹைலைட்டாக இருக்கிறது. அந்த கட்சியில் இப்பொழுது முதல்வர் பாஜகவிற்கு எதிரான ஒரு நிலையை முன்னெடுத்து இருப்பதாகவும், பன்னீர்செல்வம் பாஜகவிற்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்திருப்பதாகவும், அவர்கள் கட்சிக்குள்ளேயே ஒரு கருத்து நிலவி வருகிறது. இதற்கிடையே, அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கூடும் போது அதில் அம்பாசமுத்திரத்தின் தாக்கம் இருக்குமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழு முடிந்த பின்னர் அடுத்த சில தினங்களில், அமித்ஷா சென்னை வரும் காரணத்தால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.