இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு!

0
56
Anbumani met Edappadi Palanisami
Anbumani met Edappadi Palanisami

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு!

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக – பாமக, இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் இணைந்து போட்டியிடும் என அதிமுக கூறி வந்தது. ஆனால், இட ஒதுக்கீடு கிடைக்காமல் எந்த முடிவும் அறிவிக்க முடியாது என பாமக கூறி வந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை அவர்களது இல்லத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், இட ஒதுக்கீடு கிடைத்தது மருத்துவர் ராமதாசின் 40 ஆண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார். மேலும், இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்த அனைத்து கட்சிகள், அமைப்புகள், சமுதாயத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், களத்தில் போராடிய பாமக, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்பினரை பாராட்டினார்.

பின்னர் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றும், இட ஒதுக்கீடுக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை என்றார். மேலும், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் இன்று(சனிக்கிழமை) அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

இதன்மூலம், இன்று பிற்பகலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.