லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக

0
84
Edappadi Palanisamy
Edappadi Palanisamy

லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக

 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சயமைத்தது முதல் திமுக தரப்பு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் ஆட்சி மீது கெட்ட பெயர் வந்து விட கூடாது என முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேசியதை கூட அன்பாக எச்சரிக்கும் வகையில் இனி இது போன்று யாரும் பேச கூடாது என ஸ்டாலின் ஆலோசனையை தெரிவித்தார்.

 

அதே நேரத்தில் இதையும் மீறி எங்கயாவது நடக்கும் ஒரு சில பிரச்சனைகளையும் அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் அதை பேசு பொருளாக மாற்றாமல் அங்கேயே முடித்து விடுகிறார்கள். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆட்சிக்கு அல்லது அரசுக்கு எதிராக விமர்சன கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது வழக்குகள் அதிகமாக பதிவாகி வருகிறது.

 

பாஜக ஆதரவாளர்களான கிஷோர் கே சாமி மற்றும் மாரிதாஸ் முதல் தற்போது கைதாகியுள்ள சவுக்கு சங்கர் உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அதிகாரப்பூர்வ எதிர்கட்சியான அதிமுக எங்குள்ளது என்று தேடும் அளவிற்கு தான் அவர்களின் செயல்பாடுகள் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் அவ்வப்போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆளும் திமுகவை எதிர்த்து விமர்சித்து வருகின்றனர்.ஆனால் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பிடமிருந்து ஆளும் அரசுக்கு பெரிய அழுத்தம் எதுவும் தரப்படுவதில்லை என்பது தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

 

இதற்கு காரணம் அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரமா? அல்லது ஆளும் திமுகவை பார்த்து அச்சமா என்ற சந்தேகம் எழுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு வேட்டையை நடத்தி அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கொடநாடு வழக்கையும் தூசு தட்டி அதை எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் விதமாகவும் காய் நகர்த்தி வருகிறது. ஆளும் திமுக அரசை எதிர்த்து விமர்சனம் எழுந்தால் ரெய்டு மற்றும் கொடநாடு வழக்கை வைத்து சமாளிக்கலாம் எனவும் திமுக திட்டமிட்டு வருவது அதிமுக தரப்பை அமைதியாக்கி விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

 

அதே நேரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்க வைத்த எடப்பாடி பழனிசாமி அதை நிலை நிறுத்திக் கொள்ள பல வகைகளில் முயற்சித்து வருகிறார். இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இனி அதிமுக எடப்பாடி பழனிசாமி கையில் தான் என்பதை உறுதி செய்யும் வகையிலும் எதுவும் நடக்கவில்லை. இவர்களுக்கிடையே நடக்கும் இந்த அதிகார மோதலை மாநிலத்தில் ஆளும் திமுகவும், மத்தியில் ஆளும் பாஜகவும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.அதை சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் உறுதி செய்கின்றன.

 

அதிமுகவில் நிலவி வரும் இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் முக்கிய பேசுபொருளாக இரண்டு சம்பவங்கள் நடந்தன. கோவை குண்டுவெடிப்பு, வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் என இந்த இரண்டிலும் எதிர்கட்சியாக அதிமுக கோட்டை விட்டது என்றே தெரிகிறது.

 

எதிர்க்கட்சிகள் என்றாலே சிறிய பிரச்சினையையும் ஊதி பெரிதாக்கி விடுவர். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த அடிப்படையில் தான் சிறிய பிரச்சனைகளுக்கு கூட போராட்டம், வழக்கு என திமுக தீவிரமாக செயல்பட்டு அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுக்கு அடிக்கடி குடைச்சலை கொடுத்து வந்தது. இந்நிலையில் அதிமுகவுக்கு சாதகமாக லட்டு போல இரண்டு விஷயங்கள் கையில் கிடைத்தும் அதை கோட்டை விட்டுவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. இதில் வெறும் அறிக்கை, குற்றச்சாட்டு என சைலண்டாக முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக கள அரசியலில் வெளுத்து வாங்கி வருகிறது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தத்தளித்து கொண்டிருக்கும் இந்த சூழலில் பாஜக இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஸ்கோர் செய்தது.

 

இதை உணர்ந்த இரத்தத்தின் ரத்தங்கள் அதிமுக உட்கட்சி பூசலில் இருந்து உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும்.ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் மீண்டும் ஒன்றிணைய இனி வாய்ப்பில்லை என்பதால், கட்சி யார் கையில் என்று அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்துங்கள் என புலம்பி வருகின்றனர்.

 

இவ்வாறு அவர்கள் புலம்புவதை, குழப்பத்தில் தவிப்பதை பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது. இத்தகைய விஷயங்கள் நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாக வரவில்லை எனினும், மாவட்ட அளவில் இது குறித்த குமுறல்கள் எழுந்து கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.