முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

0
250

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோரை அச்சுறுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் கொடுத்திருக்கின்றது.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் சென்ற இரண்டாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கிராம சபையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி கேள்விகளை கேட்கவும், அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் நீங்கள் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் வெளியே செல்லுங்கள் என்று காட்டமாக தெரிவித்தார். அவர் காவல்துறையினரால் வெளியேற்றப் பட்டு இருக்கிறார்.

இதற்குப் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேலுமணி அவர்களே இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால், நீங்கள் மட்டும் கிடையாது முதலமைச்சர் கூட எங்கும் நிகழ்ச்சி நடத்த இயலாத சூழ்நிலை உருவாகும். என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதுகுறித்து திமுகவின் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி போன்றோருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் டிஜிபியிடம் நேற்று புகார் அளித்திருக்கிறார்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பாபு முருகவேல், மக்கள் கிராம சபை என்ற பெயரிலே சட்டவிரோதமாக பொதுக்கூட்டம் நடத்திவரும் ஸ்டாலின் முதலமைச்சர்,மற்றும் அமைச்சர் வேலுமணி போன்றோரை மிரட்டும் பாணியில் பேசியிருக்கிறார். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் கோயமுத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடந்த சட்டத்திற்கு புறம்பான மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் இப்படி கலவரத்தை தூண்டும் விதமாக பேசி இருக்கின்றார் .அதோடு திமுகவினரை தூண்டும் வகையில் அவர் பேசியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் வேலுமணி, மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் தமிழகத்திலேயே எங்கேயும் கூட்டம் நடத்த இயலாது என்று மிரட்டும் பாணியில் ஸ்டாலின் பேசியிருப்பதாக குறிப்பிட்ட பாபு முருகவேல், தொண்டாமுத்தூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி எழுப்பிய பெண்ணை அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள் தான் என ஸ்டாலின் கற்பனை செய்து தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக திமுகவினர் அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். ஆகவே திமுக தலைவர் ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி இடம் மனு அளித்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.